அந்த நாளின் வெயிலைக் கூட பாரதி தன் நினைவுகளால்
இன்னும் உஷ்ணப்படுத்தியதைப் போல் இருந்தது.
பாரதிபக்தர் இசைக்கவி ரமணன் நல்லதோர்
வீணையோடும் வீணை எஸ். பாலச்சந்தர் பெயரன் பரத்வாஜ் ராமனோடு நிகழ்சிக்காக சென்னையில் இருந்து வந்திறங்கினார்.
ஒரு
நாளில் நிகழ்ச்சியை அழகாக ஏற்பாடு செய்தவர் கல்விச்சங்கத்தின் செயலாளர் திரு .செல்லையா பாரதியின்
மீது அளவற்ற அன்புகொண்டவர்.
யாரேனும்
செருப்புக்காலோடு தப்பித்தவறியும் உள்ளே போய்விடக்கூடாதே என்ற பதைபதைப்போடு பாரதியார்
பயின்ற அந்த திருநெல்வேலி மதிதா இந்துக் கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் வகுப்பறையைப்
பக்தியோடு அந்தப் பள்ளி காத்து வருவது வியக்க வைத்தது.
தமிழ்ப் படைப்பாளியாகத் தொடர்ந்து 50 ஆண்டுகளாக
எழுதிவரும் எழுத்தாளர் வண்ணதாசன் நிகழ்சிக்கு வந்திருந்து வாழ்த்தினார்.
தொன்மைச்
சிறப்பு மிக்க அந்த வகுப்பறையில் பாரதி அமர்ந்திருந்த இடத்தில் மாணவியர்
அமரவைக்கப்பட்டனர்.
கல்விச் சங்கச் செயலாளர் மு.செல்லையா வரவேற்றுப்
பேசினார்.தலைமையாசிரியர் அழகியசுந்தரம் விழாவுக்குத் தலைமை வகித்தார்.
சதக்கத்துல்லாஹ்
அப்பா கல்லூரி தமிழ்த்துறைத்தலைவர்,
முனைவர்
ச.மகாதேவன்,’’ மகாகவி பாரதி வறுமையிலும் திருநெல்வேலியில் பள்ளிப்படிப்பை
விடவில்லை.பாரதியின் மனஉறுதி நம் மாணவமாணவியருக்கு வேண்டும்’’என்று பேசினார்.
நல்ல
மனங்களின் வருகையால் அந்த காலைப்பொழுது
கலைப்பொழுதாகிக் கொண்டிருந்தது.
தன் பாடல்கள் என்ன ராகத்தில் பாடப்பட வேண்டும்
என்று குறிப்புதந்த மகாகவியை ‘’எட்டயபுரத்து சுப்பையா ‘’ பாடலோடு ரமணன்
பாரதிக்குள் எங்களை இசையால் அழைத்துச் சென்றார்.
அழகான குரலில் அவர்பாடப்பாட
பாரதிஅமர்ந்த இருக்கையில் அமர்ந்திருந்த
சிறுகுழந்தைகளும் ரமணன்அய்யாவுடன் தங்களை மறந்து
பாடிக்கொண்டிருந்தன.ஓடிவிளையாடுபாப்பா என்று அவர்பாடப்பாட குழந்தைகளும்
அப்படலுக்குள் ஓடிவிளையாடிகொண்டே இருந்தனர்.
நூறு ஆண்டுகள் பழமையான அந்த வீணைசரஸ்வதி
படத்திற்குக் கீழ் மேடையில் அழகான மயில்படம் போட்ட வீணையை பரத்வாஜ்மீட்டியதும்
ரமணன் அதன் நயத்தை அழகாகச் சொன்னதும் பிடித்திருந்தது.
‘ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே’
‘தீராத
விளையாட்டுப் பிள்ளை’ ‘சின்னஞ் சிறு கிளியெ’ என்னும் பாரதி
பாடல்களின் நயத்தை ரமணன் விளக்கிச் சொல்ல, பரத்வாஜ்
அருமையாக வாசித்தார்

. குழந்தைகளிலிருந்து
பெரியவர்கள் வரை எல்லோரும் ரசித்தார்கள். தீராதவிளையாட்டுப் பிள்ளையில் வீணை வேறுவேறு குரல்களால்
பேசிப்பேசிப் பாடியது.பாரதி அமர்ந்திருந்த அந்தக் கடைசிப்பெஞ்சில் அமர்ந்தபோது
மகாகவியின் நினைவால் அழுகை வந்துவிட்டது.
கொங்குதேர் வாழ்க்கை நடத்திய கவிதைத் தும்பி
அமர்ந்த இடத்தில் அமர்ந்தோம்..கனிந்தோம்..ஓவியர் வள்ளிநாயகம் இருபத்தெட்டு நாட்கள்
தவமிருந்து வரைந்த பாரதிஓவியங்களை வண்ணதாசன்அய்யா நெடுநேரம் உள்வாங்கிக்
கொண்டிருந்தார்.
பாரதியார் பயின்ற அந்த வகுப்பறையில் அனைவரும் மாணவர்களானோம். பாரதி
பிறந்ததினத்தில் மறக்கஇயலா பாரதிஇசை நிகழ்ச்சி முடித்த கையோடு நிறைவாகப்
புறப்பட்டோம்.
No comments:
Post a Comment